இந்திய வளம் பற்றிய சிறு தொகுப்பு.

காந்தி அடிகளின் ஏழு சமுதாயப் பாவங்கள்

"சமுதாயப் பாவங்கள் ஏழு.....
1. கொள்கையற்ற அரசியல் (Politics without Principle)
2. உழைப்பற்ற செல்வம் (Wealth without work)
3. நெறியற்ற வாணிபம் (Commerce without morality)
4. பண்பாடற்ற கல்வி (Knowledge without character)
5. மனசாட்சியற்ற மகிழ்ச்சி (Pleasure without conscience)
6. மனித நேயமற்ற அறிவியல் (Science without morality)
7. தியாகமற்ற வழிபாடு (Worship without humanity)"

- மகாத்மா காந்தி




என்ன வளம் இல்லை
என்ன வளம் இல்லை இந்த இந்தியத் திருநாட்டில்...
இயற்கை வளம் இல்லையா?
செயற்கை வளம் இல்லையா?
தொழில் வளம் இல்லையா?
மனித வளம் இல்லையா?
சிந்தனை வளம் இல்லையா?

எல்லா வளங்களும் இந்தியாவில் இருக்கின்றன. பிறகு, ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டு நிறுவனங்களிடம். ஒவ்வொரு இந்தியனும் தெளிவாக சிந்திக்க வேண்டும், அதுவும் இக்கணமே....


தொலைநோக்குப் பார்வை இல்லை

முதலில் சாதாரணமாக இந்திய இளைஞர்களிடம் தெளிந்த சிந்தனை மற்றும் தெளிவான தொலைநோக்குப் பார்வை இல்லை.

இரண்டாவது, தொலைநோக்குப் பார்வை உள்ள இந்திய இளைஞனிடம், கனவு வழி செயல்பட நேரம் இல்லை.

மூன்றாவது கனவு வழி செயல்பட துணிவு உள்ள இளைஞனுக்கு, தன்னுடைய கனவில் ஒரு பிடிப்பு மற்றும் நம்பிக்கை இல்லை.


வளர்ந்த இந்தியா
பல தனிமனிதர்களின் தெளிவான தொலைநோக்குப் பார்வை மற்றும் அந்தக் கனவை நனவாக்கும் செயல் வேகத்தின் சங்கமம்தான் ஒரு நாடு வருங்காலத்தில் அடைய வேண்டிய வளர்ச்சியின் இலக்கு.

இன்று 2008-ம் ஆண்டில் இந்தியா ஒரு வளரும் நாடு....

2025-ம் ஆண்டில் உலக அரங்கில் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக எழுச்சி பெறும்.....


வல்லரசு இந்தியா
2050-ம் ஆண்டில் உலகப் பொருளாதார அரங்கில் இந்தியா ஒரு வல்லரசு நாடாக மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற உள்ளது. என்ன நம்ப முடியவில்லையா?

ஆனால், உங்கள் கண் முன்னால் இந்த நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. வாருங்கள் வாய்ப்புகளை முன்கூட்டியே யூகித்துப் பயன்படுத்தி முன்னேறுவோம்.


வல்லரசு நாட்டின் தகுதிகள்
வல்லரசு நாடு என்று உலகில் உள்ள ஒரு நாட்டை, எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்து சொல்லுகிறோம்?

ஒரு நாடு பெறும் உலக உற்பத்திக் குறியீட்டின் பங்கைக் கொண்டா?
உலக ஏற்றுமதியில் ஒரு நாட்டின் பங்கைக் கொண்டா?
ஒரு நாட்டின் தனிமனித வருமானத்தின் அளவைக் கொண்டா?
ஒரு நாட்டின் மக்கள் தொகையைக் கொண்டா?
ஒலிம்பிக் போட்டியில் ஒரு நாடு பெறும் தங்க மெடல்களின் எண்ணிக்கையைக் கொண்டா?


வாய்ச்சொல் வீரர்கள்.... செயல் வீரர்கள்....

ஒரு நாட்டின் பங்குச்சந்தை வர்த்தகக் குறியீட்டை கொண்டா?
ஒரு நாட்டில் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் செய்த முதலீட்டைக் கொண்டா?
முதலில், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் குறிப்பாக இன்றைய இந்திய இளைஞர்களுக்கு, இந்திய நாடு, இந்திய நாட்டு வளர்ச்சி பற்றியக் கண்ணோட்டத்தில் ஒரு தெளிவு வேண்டும். அதன் பிறகுதான், அந்த வல்லரசு இந்தியா என்ற நோக்கத்தை நோக்கி ஒவ்வொரு இந்திய இளைஞனும் தெளிவாகப் பயணம் செய்ய முடியும்.



இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2050

இந்தியப் பொருளாதாரம் 2050-ம் ஆண்டில், அதாவது அடுத்த 41 ஆண்டுகளில், குறைந்தது 28 மடங்கு முதல், அதிகபட்சமாக 37 மடங்கு முன்னேற்றம் காண இருக்கிற்து.

அதன் விளைவாக, ஒவ்வொரு இந்திய இளைஞனின் வாழ்க்கைத் தரம் 28 மடங்கு முதல் 37 மடங்கு வரை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய உன்னதமான வாய்ப்புகள் உள்ளது பற்றி 99 சதவீத இன்றைய இந்திய இளைஞர்களுக்கு தெரியாது.



வருங்கால இளைஞர்கள் தங்களைச்சுற்றி உள்ள மிகப் பெரிய வாய்ப்புகளைப் பற்றி முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். தெளிவான சிந்தனையோடு மிகப் பெரிய வாழ்க்கைக் குறிக்கோளை நிர்ணயிக்க வேண்டும்.

சிந்தனையோடு கூடிய உழைப்பால் உயரிய வாழ்க்கை இலக்கை அடைய வேண்டும். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொண்டு, வலிமையான பாரதத்தையும் மற்றும் அமைதியான உலகத்தையும் உருவாக்கப் பாடுபட வேண்டும்.


இந்தியாவில் தற்பொழுது பலப்பல வாய்ச்சொல் வீரர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் இருந்து சில செயல் வீரர்கள் இருக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்க முயற்சிப்போம்.

பிறகு செயல் வீரர்கள் என்ற நிலையில் மட்டும் நின்று விடாமல், செயல்களை தினம் தினம் சீரிய சிந்தனையோடு கூடிய நோக்கத்தோடு சீரமைத்துக் கொண்டு பலப்பல சாதனை வீரர்களை உருவாக்க முயற்சிப்போம்.



நம்மைச்சுற்றி எங்கு பார்த்தாலும் பேச்சு... பேச்சு... செல்போனில் பேச்சு. நாம் உபயோகிக்கும் செல்போன்களான நோக்கியா, சோனி-எரிக்சன், மோட்டரோலா, எல்ஜி, சாம்சங்... எல்லாம் வெளிநாட்டு நிறுவனப் பொருட்கள்.

உலகிலேயே அதிக அளவு இஞ்சினியர்களை உருவாக்கும் நாடு சைனா, வருடத்திற்கு 6,00,000 இஞ்சினியர்கள் புதிதாக உருவாக்கப்படுகிறார்கள்.

அதற்கு அடுத்தபடியாக 5,00,000 இஞ்சினியர்களை உருவாக்கும் நாடு நமது இந்தியா தான்.



இந்த 5 லட்சம் இஞ்சினியர்களில் அதிகமானவர்கள் கம்ப்யூட்டர், எலெக்ட்ரர்னிக்ஸ் ம்ற்றும் கம்யூனிகேஷன் இஞ்சினியரிங் படித்தவர்கள். அப்படி இருக்க ஏன் உலகப் புகழ் பெற்ற ஒரு செல் போன் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் இல்லை.

செல்லில் பேசிக்கொண்டே இருக்கும் இந்தியப் பொறியியல் இளைஞனே சற்று சிந்திக்கவும்...

நோக்கியாவிற்கு "நோ" (No) சொல்லு...
இன்கியாவிற்கு "எஸ்" (Yes) சொல்லு...
அது என்ன "இன்கியா"?


இன்கியா
இன்கியா இன்றைய இந்திய இளைஞனின் கனவு. ஆனால் 2020, 2030, ஆண்டுகளின் நனவு. உலகம் முழுவதும் இந்திய செல்போன் IN(DIA) + KIA = INKIA, இன்கியா செல்போன் தான் இருக்க வேண்டும்.

இக்கணத் தேவை இத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்ட இந்தியப் பொறியாளர்கள். என்ன வளம் இல்லை இந்த இந்தியாவில்? ஏன் மேலைநாட்டு செல்போனை இந்தியர் உபயோகிக்க வேண்டும்? முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.


இளைஞனின் எல்லைக் கட்டிய நிலை
இன்றைய சராசரி இந்திய இளைஞனுக்கு நோக்கம் எல்லாம் எப்படி இருக்கிறது என்றால் தான், தன் குடும்பம், தன் சுற்றம், தன் வேலை என்ற சிறிய அளவில் எல்லைக் கட்டிய நிலையிலேயே உள்ளது.

அத்தகைய குறுகிய நோக்கம், பெரிய அளவில் விரிவு அடைந்து, இந்த 5000 வருட பாரம்பரியமிக்க இந்தியத் திரு நாட்டை வலிமையாக்குவதே ஒவ்வொரு இந்திய இளைஞனின் தலையாய கடமை என்ற நிலைமை உருவாக வேண்டும்.


இளைஞனே நாட்டுக்கு என்ன செய்தாய்?

ஜான் எப். கென்னடி 1960-ஆம் ஆண்டு அமெரிக்க இளைஞர்களை பார்த்து சொன்னார்.

'நாடு உனக்கு என்ன செய்தது?' என்று கேட்காதே
'நீ நாட்டுக்கு என்ன செய்தாய்?' என்று மாற்றி யோசி என்றார்.

இந்தக் கேள்வியை ஒவ்வொரு இந்திய இளைஞனும் தினம் தினம் தன் மனசாட்சியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். சிந்தனை வழி கிடைத்தத் தெளிவின்படி, செய்யும் செயலை சீரமைத்துக் கொண்டு முழு ஈடுபாட்டோடு, செயல்பட்டு வல்லரசு இந்தியா என்ற கனவுத் தீயினை மனதில் மூட்டி ஒவ்வொரு இந்தியனும் அத்தகைய கனவை 2050-க்குள் நனவாக்குவோம்.


இன்றைய இந்திய மக்கள் தொகை 113 கோடி, இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இளைஞர்கள். அதாவது, 56 கோடி பேர், 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள்.

இதில் 50 50 லட்சம் இந்தியர்கள் வீறு கொண்டு எழுந்து வல்லரசு இந்தியா என்றக் கனவு நோக்கி 2008-ஆம் ஆண்டு புறப்பட்டால், 2050-ஆம் ஆண்டுக்கு முன்னால், ஏன் 2040-ஆம் ஆண்டுக்கு சற்றே முன்னால் அதாவது 2030-ஆம் ஆண்டிலேயே அந்த உயரிய நிலையை இந்தியா அடைந்து விட முடியும்.


50 இலட்சம் இலட்சிய இளைஞர்கள் தேவை
அன்று விவேகானந்தர் வலிமையான பாரதத்தை உருவாக்க வீறுகொண்ட 50 இளைஞர்களை தேடினார். ஆனால் இன்றைய நவபாரத வல்லரசு இந்தியாவை உருவாக்க தேவை....

500 இளைஞர்கள் கொண்ட படை அல்ல,
5,000 இளைஞர்கள் கொண்ட படை அல்ல,
50,000 இளைஞர்கள் கொண்ட படை அல்ல,
குறைந்த பட்சம் 5 இலட்சம் இளைஞர்களைக் கொண்ட ஒரு வல்லரசு இந்தியாவை விரைவில் உருவாக்க வேண்டும் என்ற இலடசிய படை,

அதிக அளவாக 50 இலட்சம் உயரிய சிந்தனை வேகம் மற்றும் செயல் வேகம் கொண்ட இளைஞர்கள் படை.



இந்திய இளைஞர்களுக்குத் தேவை.... புதிய பரிணாமம்....

இன்றைய இளைஞர்கள்தான் நாளைய நவபாரத வல்லரசு இந்தியாவின் வலிமையான தூண்கள். அத்தகைய இளைஞர்களின் வளர்ச்சி வேகமே இந்திய நாட்டின் நாளைய வளர்ச்சி வேகம்.

தேவை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு புதிய பரிணாம், மாறுபட்ட சிந்தனை மற்றும் சிந்தனையில் ஒரு தெளிவு. பிறகு புதிய உத்வேகத்துடன் இந்திய இளைஞர்கள் படை தனிமனித சமுதாய மற்றும் நாட்டின் குறிக்கோளை நோக்கி செயல்படுவதே.



சுதந்திர உணர்வு.... சுதந்திர வேட்கை......

முண்டாசுக் கவிஞன் பாரதி இந்தியத் திருநாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்" என்று தெளிவாக சுதந்திர உணர்வை மற்றும் சுதந்திரத் தீயை ஒவ்வொரு இந்திய இளைஞர்களின் மனதிலும் ஊட்டினார்.

மேலும் முண்டாசுக் கவிஞன் " முப்பது கோடி முகமுடையார், நம்மில் சிந்தனை ஒன்றுடையார்" என்று ஒவ்வொரு இந்தியனின் சுதந்திர வேட்கையையும், மற்றும் சிந்தனையில் ஒரு முனைப்பைத் தெள்ளத்தெளிவாக படம் பிடித்துக் காட்டினார்.

"பாருக்குள்ளே நல்ல நாடு, நம் பாரத நாடு"


சிந்தனையில் சுதந்திரத் தீ

ஆங்கிலேயர்களுக்கு அடிமைப் பட்டு இருந்த காலக் கட்டத்திலேயே இந்திய இளைஞர்களின் சிந்தனையில் சுதந்திரத் தீயை மூட்டி இந்திய இளைஞர்களிடம் நல்ல தெளிவை ஏற்படுத்தினார் பாரதியார். விளைவு இந்திய இளைஞர்கள், சுதந்திர இந்தியாவை நோக்கி மன வெறிவுடன் பயணம் செய்து அதில் வெற்றியும் கண்டு வெற்றிக்கொடி நாட்டினார்.

இன்றைய இந்திய இளைஞர்களுக்கு தேவை அதைப் போன்ற தெளிவான ஒரு முனைப்பான சிந்தனை மற்றும் வல்லரசு இந்தியா என்ற நிலையை நமது இந்திய நாடு மிக விரைவில் அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கம் மற்றும் நோக்கம் நோக்கிய தெளிவான மன வெறியுடன் கூடிய பயணம். முயன்றால் முடியாது ஒன்றும் இல்லை.



மனித வாழ்க்கைப் பயணம்

" மனிதன் என்ன செயல் செய்ய வேண்டும்? மற்றும் அதை எவ்வாறு செய்ய வேண்டும்?
நன்மையை செய்.தீமையை எதிர்த்துப் போராடு.

இவ்விரு செயல்களும் உனது ஆத்ம சக்தியையும், மனித சமூகத்தின் ஆத்ம வல்லமையையும் வளர்க்கும் விதத்தில் பணி செய்."

- மகாத்மா காந்தி





இளைய பாரதமே வா... வா.... உலகம் உன் காலடியில்.

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.